செய்திகள்
கோப்புப்படம்

மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 2 பேர் பலி - 75 பேர் காயம்

Published On 2021-01-16 20:57 GMT   |   Update On 2021-01-16 20:57 GMT
மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 2 பேர் பலியானார்கள். 75 பேர் காயம் அடைந்தனர்.
திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது.

முதலில் கோவில் காளை அவிழ்த்தவுடன் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 117 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 81 பேர் மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்க முயன்றனர்.

இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் காளையை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக மஞ்சுவிரட்டு பொட்டலில் காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விட்டனர். இதை அங்கு திரண்டிருந்தவர்கள் அடக்க முயன்றனர். அப்போது மாடு முட்டியதில் சிவகங்கையை அடுத்த மதகுபட்டி அருகே உள்ள பெரியமச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த போஸ் (வயது 60) என்பவர் முதுகில் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதே போல் திருப்பத்தூர் அருகே கள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியகருப்பன்(59) என்பவருக்கும் மாடு முட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த மஞ்சுவிரட்டில் மேலும் 75 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவகுழுவினர் சிகிச்சை அளித்தனர்.

சிராவயல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். மழை பெய்ததால் போட்டியில் வழக்கத்தைவிட குறைவான காளைகளே கலந்து கொண்டன.
Tags:    

Similar News