திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடலில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
பதிவு: ஜனவரி 16, 2021 11:35
சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றதை படத்தில் காணலாம்.
காணும் பொங்கலை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடந்து மற்றகால பூஜைகள் நடந்தது.
பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் பரிவேட்டைக்காக கோவிலில் இருந்து புறப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி கிரிபிரகாரம் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோவிலை சேர்ந்தார்.
காணும் பொங்கலை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தனர். அதிகாலையில் இருந்தே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடற்கரைக்கு யாரும் செல்லாத வகையில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மேற்பார்வையில், கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைைமயில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :