செய்திகள்
ராகுல்காந்தி

விவசாயிகளை அழிக்க மத்திய அரசு சதி- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Published On 2021-01-15 09:04 GMT   |   Update On 2021-01-15 09:04 GMT
விவசாயிகளை அழிக்க மத்திய அரசு சதி செய்கிறது என்று ராகுல்காந்தி கூறினார்.
அவனியாபுரம்:

மதுரை அவனியாபுரத்தில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடந்தது. இந்த போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதலில் கோவில் 4 கோவில் காளைகள் களம் இறக்கப்பட்டன. அதன் பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் சீறி பாய்ந்தன. இந்த காளை களை அடக்கும் முயற்சியில் காளையர்கள் முயன்றனர்.

இந்த போட்டியில் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் 8 சுற்றுக்கு 400 வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் காளைகள் தூக்கி வீசியதிலும், வேடிக்கை பார்க்க வந்தவர்களில் சுமார் 60 பேர் காயம் அடைந்தனர். வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 798 காளைகள் வந்திருந்தன. ஆனால் மாலை 4 மணி வரை நடந்த போட்டியில் 529 காளைகள் மட்டுமே அவிழ்த்துவிட முடிந்தது. மீதம் உள்ள காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி விழா குழுவினர் அனுப்பி வைத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பார்வையிட்டனர். அவர்களுடன் புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாணிக்கம் தாகூர் எம்.பி., விஜயதாரணி எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பங்கேற்று ஜல்லிக்கட்டை ரசித்து பார்த்தனர்.

மேலும் ராகுல்காந்தியும், உதயநிதி ஸ்டாலினும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கி அசத்தினார்கள்.

சிறிது நேரம் ஜல்லிக்கட்டை ரசித்து பார்த்த ராகுல்காந்தி அங்கிருந்து புறப்பட்டு திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்துக்கு சென்றார். அங்கு கிராம மக்களுடன் பொங்கல் கொண்டாடி அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.

பின்னர் அவர் மதுரையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக ராகுல்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் ஒரு விழா நாளில் இங்கு வந்திருக்கிறேன். ஆகவே பொங்கல் வாழ்த்துடன் தொடங்குகிறேன். நான் ஜல்லிக்கட்டை நேரடியாக பார்த்தேன். நல்ல நேரமாக அது அமைந்தது.

தமிழ் மக்கள் ஏன் ஜல்லிக்கட்டை ஊக்குவிக்கிறார்கள் என அறிந்து கொண்டேன். ஜல்லிக்கட்டு விளையாட்டு காளைகளை துன்புறுத்தும் என சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்று நேரடியாக ஜல்லிக்கட்டை பார்த்ததன் அடிப்படையில் சொல்கிறேன். அதற்கான வாய்ப்பே இல்லை.

நான் இங்கு வந்ததற்கான மற்றொரு காரணம் மத்திய அரசு நாட்டின் கலாச்சாரங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுபோல் தெரிகிறது. தமிழ் மக்களின் உணர்வுகளை, மொழியை நசுக்குவதன் மூலம் தமிழ் உணர்வை நசுக்கிவிடலாம் என் எண்ணுகிறது. அவர்களுக்கு தர என்னிடம் செய்தி உள்ளது.

ஒன்று தமிழ் உணர்வை யாராலும் அழிக்க இயலாது. இரண்டாவது தமிழுணர்வை நசுக்குவது நமது நாட்டிற்கு செய்யும் மிக மோசமான செயலாகும். பல கலாச்சாரங்கள் நமது நாட்டில் உள்ளன. அவை தாம் நமது தேசத்தின் உயிர் போன்றவை.

ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம், ஒரு குறிப்பிட்ட மொழி என்பது இல்லை. பல மொழிகள் கலாச்சாரங்கள் நமது நாட்டில் உள்ளன. தமிழ் மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் அவர்களிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொண்டேன். கடந்த காலம் குறித்த பலவற்றை அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளனர். அதோடு எதை நோக்கி நாடு நகர வேண்டுமென்ற திசையையும் காட்டியுள்ளனர். ஆகவே அவர்களுக்கும், ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.

அரசு விவசாயிகளை புறக்கணிக்க மட்டும் செய்யவில்லை. அவர்களை அழிக்கவும் சதி செய்கிறது. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. அவர்களின் 2, 3 நண்பர்களின் நலனுக்காக அழிக்க சதி செய்கிறது. விவசாயிகளைச் சார்ந்திருக்கும் விசயத்தை, அரசின் ஒரு சில நண்பர்களைச் சார்ந்திருக்குமாறு மாற்ற நினைக்கிறது.

விவசாயிகளின் நிலத்தை, உற்பத்தியை எடுத்து அவர்களின் சில நண்பர்களுக்குக் கொடுக்க அரசு விரும்புகிறது. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளை புறக்கணிக்கிறார்கள் எனும் வார்த்தை என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதை வெளிப்படுத்துவதில் பலவீனமானதாக உள்ளது.

விவசாயிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பானவர்கள். யாராவது விவசாயிகளை நசுக்கி வளம் பெறலாம் என எண்ணினால், அவர்கள் நமது வரலாற்றை பார்க்க வேண்டும். எப்போதெல்லாம் விவசாயிகள் பலவீனமானார்களோ அப்போதெல்லாம் நாடும் பலவீனமடைந்துள்ளது.

நானும் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன். விவசாயிகளை நசுக்கி, ஒரு சில வணிக அதிபர்களுக்கு உதவுகிறீர்கள். கொரோனா காலத்தில் சாதாரண மனிதனுக்கு உதவவில்லை. ஆதரவளிக்கவில்லை எனில் நீங்கள் என்ன பிரதமர்? நீங்கள் இந்திய நாட்டு மக்களின் பிரதமரா? 2, 3 தொழிலதிபர்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரா?

இந்திய நாட்டு எல்லைக்குள் சீனா என்ன செய்கிறது? அதை பற்றி ஏன் எதுவும் சொல்லவில்லை? இந்திய எல்லை பகுதியில் சீன ராணுவம் உள்ள விவகாரத்தில் முற்றிலுமாக அமைதி காப்பது ஏன்? இவைதான் நான் கேட்க விரும்புபவை.

நான் விவசாயிகள், அவர்கள் செய்தவை குறித்து பெருமைப்படுகிறேன். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். அவர்களோடு தொடர்ச்சியாக நிற்பேன். இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற அரசு கட்டாயப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News