செய்திகள்
கமல்ஹாசன்

சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்- கோவையில் கமல்ஹாசன் பேட்டி

Published On 2021-01-14 01:53 GMT   |   Update On 2021-01-14 01:53 GMT
தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டங்கள் உள்ளதுடன், வருகிற சட்ட மன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட உள்ளதாக கோவையில் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
கோவை:

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 5-ம் கட்ட பிரசாரமாக கோவைக்கு வந்து உள்ளார். இவர் நேற்று கோவை தனியார் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் பயணிக்கும் இடங்களில் எல்லாம் பேரெழுச்சியை பார்க்கிறோம். இது சந்தோசமாக உள்ளது. இதில் ஒவ்வொரு கட்டமாக எங்களது திட்டங்களை விளக்கி வருகிறோம். சுற்றுச்சூழல் குறித்த எங்களது கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஏற்கனவே அறிவித்து இருந்தோம். இப்பொழுது 3-ம் கட்டமாக தொழில்துறைக்கான தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கிறோம்.

இது 7 அம்சங்களை கொண்ட திட்டமாகும். புத்தாக்கம் மற்றும் புதிய சாத்தியக்கூறுகளுக்கான துறை எனும் திட்டத்தின்படி அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை தொழில் முனைவு கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து அவற்றை நடைமுறை சாத்தியமாக்கிடவும், தொழில்துறை புரட்சி 4.0-க்கு வித்திடுவதற்கு ஏதுவாக புத்தாக்கம் மற்றும் புதிய சாத்திய கூறுகளுக்கான துறை நிறுவப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, கமல்ஹாசன் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் ஒரு எம்.எல்.ஏ. கூட கிடைக்காது என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளாரே?

பதில்: அது அவரது பிரார்த்தனையாக இருக்கலாம். ஆனால் எங்கள் பயணத்தில் கிடைக்கும் செய்தி வேறாக இருக்கிறது. நான் என்வாழ் நாளில் நட்சத்திர அந்தஸ்தை அனுபவித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இத்தகைய எழுச்சியை, கூட்டங்களை நான் பார்த்தது இல்லை.

கேள்வி: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

பதில்: நிச்சயமாக போட்டியிடுவேன். மேலும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் உள்ளதே என்று கேட்கிறீர்கள். அது தகவல்தான், நான் சொல்லவில்லை.

கேள்வி: யார் தலைமையிலான கூட்டணியில் இணைவீர்கள் அல்லது உங்களது தலைமையில் கூட்டணி அமைக்கப்படுமா?

பதில்: அதைப்பற்றி இப்போது கூற மாட்டேன் என்று ஏற்கனவே சொல்லி விட்டேன். இந்த மாத இறுதிவரை காலஅவகாசம் உள்ளது. தேர்தல் நேரத்தில் அதுகுறித்து சொல்லப்படும்.

கேள்வி: திராவிட கட்சிகளை போல் நீங்களும் இலவசங்கள் அறிவிக்கிறீர்களே...

பதில்: அது இலவசம் அல்ல. வீட்டுக்கு ஒரு கணினி என்பது எப்படி மின்வாரிய இணைப்பு வீடுகளுக்கு வழங்கப்படுகிறதோ அதைப் போன்றது. அரசுக்கும், மக்களுக்கும் இடையே இணைப்பாக அது இருக்கும். மனிதவளத்தின் பால் செய்யும் முதலீடு அது. அரசிற்கும், மக்களுக்கும் அது சொந்தம்.

கேள்வி: சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவீர்களா?

பதில்: நாங்கள் முன்னிறுத்த போவது சாதியை அல்ல சாதனையைதான், தேவைப்பட்டால் பொதுதொகுதியில் கூட தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை நிறுத்துவோம்.

கேள்வி: முழுநேர அரசியலில் ஈடுபடுவீர்களா?

பதில்: முழுநேர அரசியல் என்று எதுவும் கிடையாது. தனக்கென்று தொழில் எதுவும் இல்லாமல், சம்பாத்தியத்திற்கு வழிஇல்லாமல் அரசியலுக்கு வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை பார்க்க வேண்டும். அரசியல் என்பது தியாகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை ஒரு வேலையாக எடுத்து கொண்டும் செய்யலாம். அதற்கு தனக்கென்று சம்பாத்தியத்திற்கு ஒரு வழி இருப்பது தவறு இல்லை. அப்படி இருப்பது இன்னும் சிறப்பு அரசியலுக்கு. இதை பெரியாரும் கூறியுள்ளார்.

கேள்வி: நடிகர் ரஜினிகாந்த் வீட்டுசிறையில் வைக்கப்பட்டு உள்ளாரா?

பதில்: எனக்கு தெரியாது

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News