செய்திகள்
ரெயில்

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல ரெயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது

Published On 2021-01-13 07:11 GMT   |   Update On 2021-01-13 07:11 GMT
பொங்கல் பண்டிகைக்கு இன்று மேலும் 1 லட்சம் பேர் ரெயில்கள் மூலம் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். தட்கல் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுண்டர்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சென்னை:

பொங்கல் பண்டிகை நாளை (14-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்று (13-ந் தேதி) முதல் வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 5 நாட்கள் விடுமுறை வருகிறது.

இதையடுத்து பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாலும் ஏராளமானோர் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.

எனவே ரெயில் நிலையங்களில் நேற்று முன்தினம் முதல் பயணிகள் கூட்டம் அலை மோதியது. சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங் களில் நேற்று முன்தினமும், நேற்றும் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. ரெயில்களிலும், டிக்கெட் கவுண்டர்களிலும் கூட்டம் அலை மோதியது.

இந்த முறை முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கு அனுமதி இல்லை. எனவே அனைத்து பயணிகளும் முன்பதிவு செய்தே பயணம் செய்தனர். அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிந்தன.

ஒவ்வொரு ரெயில்களிலும் முன்பதிவு செய்தவர்களில் 300 பேர் முதல் 500 பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். அவர்கள் ரெயில்களில் கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காததால், பஸ்களில் சென்றனர்.

பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்லும் வகையில் பயணம் செய்தவர்கள் நேற்று முன்தினமே புறப்பட்டு சென்றனர். நேற்று முன்தினம், நேற்று மட்டுமே எழும்பூரில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட ரெயில்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சொந்த ஊருக்கு சென்றனர்.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து 2 நாட்களிலும் 1 லட்சத்து 70 ஆயிரம் பயணிகள் சொந்த ஊருக்கு சென்றனர்.

அதேபோல் இன்று மேலும் 1 லட்சம் பேர் ரெயில்கள் மூலம் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். தட்கல் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுண்டர்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Tags:    

Similar News