செய்திகள்
தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பதை காணலாம்

தொடர் மழையால் சோழவந்தான் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்

Published On 2021-01-13 02:48 GMT   |   Update On 2021-01-13 02:48 GMT
தொடர் மழையால் சோழவந்தான் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்கதிர்கள் முளைத்து சேதமடைந்துள்ளது.
சோழவந்தான்:

சோழவந்தான், நாச்சிக்குளம், மேல்நாச்சிகுளம், கருப்பட்டி, இரும்பாடி, ரிஷபம், நெடுங்குளம், தென்கரை, முள்ளிப்பள்ளம், காடுபட்டி, மன்னாடிமங்கலம், குருவித்துறை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தொடர் மழையால் சாய்ந்து முளைத்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலநாச்சிகுளத்தைச் சேர்ந்த பாஸ்கரன், ராமசாமி, ராஜாராம் உள்ளிட்ட விவசாயிகள் கூறியதாவது:-

நாங்கள் இப்பகுதியில் தொன்றுதொட்டு விவசாயம் செய்து வருகிறோம். தற்போது விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் முறையாக கிடைப்பதில்லை. கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், முன்னோர்கள் செய்து வந்த விவசாயத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காக கடன் வாங்கி ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவழித்து நெல் சாகுபடி செய்தோம்.

தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கதிர்கள் நிலத்திலேயே சாய்ந்து முளைத்துவிட்டது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

செலவழித்த பணம் கூட கிடைக்காத நிலையில் கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்ற கவலையில் உள்ளோம். எங்களைப் போன்ற பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அப்பொழுதுதான் அடுத்து நாங்கள் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும். மேலும் விவசாயக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மீண்டும் விவசாயம் செய்வதற்கு கடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Tags:    

Similar News