செய்திகள்
டி.குன்னத்தூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா கோவில்

டி.குன்னத்தூரில் ஜெயலலிதா கோவில் 30-ந் தேதி முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்

Published On 2021-01-12 04:32 GMT   |   Update On 2021-01-12 05:08 GMT
ஜெயலலிதாவிற்கு திருமங்கலம் அருகே கட்டப்பட்டு வரும் கோவிலை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வருகிற 30-ந் தேதி திறந்து வைக்கிறார்கள்.
பேரையூர்:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூர் பகுதியில் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. ஜெயலலிதா பேரவை செயலாளர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் இந்த பணிகள் நடந்து வருகிறது. அங்கு 4 திசைகளிலும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு மைய பகுதியில் வெண்கலத்திலான ஜெயலலிதா முழு உருவ சிலை நிறுவப்படுகிறது. மேலும் தியான மண்டபம், கலையரங்கம், மாணவர்களுக்கான பயிற்சி கூடம் அமைக்கப்படுகிறது.

கலை அம்சத்துடன் அமைக்கப்படும் ஜெயலலிதா கோவில் திறப்பு விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அய்யப்பன், வெற்றிவேல், ஐ.பி.எஸ்.பாலமுருகன், ஏ.கே.பி. சிவசுப்பிரமணியன் உள்ப பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகிற 30-ந் தேதி திறந்து வைக்கிறார்கள். இதில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News