செய்திகள்
பணம்

நெல்லை அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் 6 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2021-01-09 09:23 GMT   |   Update On 2021-01-09 09:23 GMT
நெல்லை அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.58 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கூடல்:

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்தவர் கலா.

இவர் முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். அங்கு ஆவணங்கள் பதிவு செய்வதற்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து நெல்லை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்கால் தலைமையில் போலீசார் நேற்று மாலை முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பணியில் இருந்த கலா மற்றும் 5 ஊழியர்கள், இடைத்தரகர் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

நேற்று பதிவான ஆவணங்கள், அதற்கான கட்டணம், ரசீது போன்றவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சார்பதிவாளர் கலாவின் கைப்பையில் கூடுதலாக ரூ.45 ஆயிரத்து 700 இருந்தது.

இதைத்தவிர அங்கு பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர் பவாகானிடம் ரூ.6 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.57 ஆயிரத்து 960 கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து சார்பதிவாளர் கலா, இடைநிலை உதவியாளர் பவாகான் உள்பட 6 பேரிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். மாலை 6 மணிக்கு தொடங்கிய விசாரணை நள்ளிரவு 12 மணி வரை சுமார் 6 மணி நேரம் நீடித்தது.

இது தொடர்பாக தாசில்தார் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கலா மற்றும் பவாகான் ஆகியோர் மீது சட்டத்திற்கு புறம்பாக கூடுதல் பணம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News