செய்திகள்
கைது

குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடி மோசடி- செயலாளர் உள்பட 2 பேர் கைது

Published On 2021-01-09 03:46 GMT   |   Update On 2021-01-09 03:46 GMT
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1 கோடி மோசடி நடந்ததாகவும், முறைகேடாக கடன் வழங்கியதாக செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நடந்துள்ள இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

குமரி மாவட்டம் மயிலாடியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சங்கத்தின் தலைவராக மயிலாடியை சேர்ந்த சாய்ராம்(வயது 46) என்பவர் இருந்தார். அப்போது சங்க செயலாளராக முத்தையாவும் பணியாற்றினார். அந்த கால கட்டத்தில், கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.

தகுதியற்ற பயனாளிகளுக்கும், கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத நபர்களுக்கும் கடன் கொடுத்ததாக கூறி முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதுபற்றி குமரி மாவட்ட கூட்டுறவுத்துறை துணை பதிவாளர், நெல்லை மாவட்டம் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி வணிக குற்றப்புலனாய்வு பிரிவு துணை சூப்பிரண்டு ஜாகிர் உசேன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து ரூ.1 கோடியே 15 லட்சம் முறைகேடான முறையில் தகுதியற்ற பயனாளிகளுக்கு வழங்கி மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் இதில் அஞ்சுகிராமத்தை சேர்ந்த கவுசல்யா(47) என்பவர் புரோக்கராக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து சங்க செயலாளர் முத்தையா மற்றும் பெண் புரோக்கர் கவுசல்யா ஆகியோரை நேற்று முன்தினம், வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் குமரி மாவட்டத்தில் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள சங்க தலைவர் சாய்ராமை போலீசார் தேடி வருகின்றனர். அவர் தி.மு.க. பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News