செய்திகள்
பாபநாசம் அணை

பாபநாசம் அணைப்பகுதியில் கனமழை

Published On 2021-01-08 07:57 GMT   |   Update On 2021-01-08 07:57 GMT
பாபநாசம் அணை பகுதியில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக 25 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. மாவட்டத்தில் ஒருசில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தது. அம்பை, சேரன்மகாதேவி, மணிமுத்தாறு, பாளை, நெல்லை பகுதிகளில் நேற்று மாலை விட்டுவிட்டு மழை பெய்தது. ஒருசில இடங்களில் மாலையில் கனமழை பெய்தது.

அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 25 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மணிமுத்தாறு அணையில் 5 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 142.10 அடி நீர் இருப்பு உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 1494 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 145.67 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 116.85 அடி நீர் இருப்பு உள்ளது.

அணை பகுதிக்கு தற்போது வரை வினாடிக்கு 576 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. விரைவில் நிரம்பிவிடும் என்பதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சியுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணிமுத்தாறு அணை பகுதிக்கு செல்லும் சாலை கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சேதமடைந்து காணப்படுகிறது. பள்ளங்களில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள சிவகிரி பகுதியில் கனமழை பெய்தது.தென்காசி, ஆய்குடி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் சுமார் 3 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணை பகுதிகளை பொறுத்தவரை கடனா அணையின் நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 243 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் 79.75 அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. கருப்பாநதியில் 65.621 அடியும், அடவிநயினார் அணையில் 73.25 அடியும் நீர் இருப்பு உள்ளது.

மிகச்சிறிய அணையான குண்டாறில் தொடர்ந்து நீர் நிரம்பி வழிகிறது. குற்றாலம் அருவிகளில் மிதமான அளவு கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News