செய்திகள்
முதலமைச்சர் பழனிசாமி

டெல்லியில் தமிழ் அகாடமி - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி

Published On 2021-01-04 18:20 GMT   |   Update On 2021-01-04 18:20 GMT
டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்ததற்காக முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:

டெல்லி துணை முதல் மந்திரியும், கலை, கலாசார மொழித்துறையின் மந்திரியுமான மணிஷ் சிஷோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

டெல்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்பும் வகையில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின் பெயரில் தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த அகாடமியின் தலைவராக டெல்லி தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் அகாடமிக்கான தனி இடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் விரைவில் ஒதுக்கப்படும்.

தமிழகத்திலிருந்து ஏராளமான மக்கள் டெல்லியில் பணியாற்றி வருகிறார்கள். தமிழக மக்களுக்காக அரசு சார்பில் ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழ் மக்களின் கலாசாரம், மொழி, கலை ஆகியவற்றை மற்ற மாநில மக்களும் உணரும் வகையில் தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அகாடமி மூலம் தமிழ் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள், சன்மானம் வழங்கி கவுரவிக்கப்படும். தமிழ் மக்களின் கலாசாரத்தைப் போற்றும் வகையில் விழாக்கள், நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்படும். தமிழ் மொழியை பரப்பவும் தேவையான உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாசாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்துள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News