செய்திகள்
சொரக்குடியில் வேலைவாய்ப்பு முகாமிற்காக நடைபெற்றுவரும் பணிகளை அமைச்சர் காமராஜ் பார்வையிட்ட போது எடுத்தபடம்.

சொரக்குடியில் நடக்க இருந்த வேலைவாய்ப்பு முகாம் 27-ந்தேதிக்கு ஒத்திவைப்பு - அமைச்சர் காமராஜ் தகவல்

Published On 2021-01-02 13:35 GMT   |   Update On 2021-01-02 13:35 GMT
மழை காரணமாக சொரக்குடியில் நடக்க இருந்த வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
நன்னிலம்:

நன்னிலம் அருகே சொரக்குடியில் அரசின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 7-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் நேற்று சொரக்குடியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதற்கான ஏற்பாட்டு பணிகளை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-

நன்னிலம் அருகே சொரக்குடியில் அரசின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் வருகி்ற 7-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக தெரிவித்து இருந்தனர். இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களது விண்ணப்பங்களை அரசு இணையதளத்திற்கு அளித்து வந்தனர்.

இந்தநிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதாலும், மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முகாமில் கலந்துகொள்ள வரும் இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு சிரமம் ஏற்படும். எனவே மழையின் காரணமாக வருகிற 27-ந்தேதிக்கு வேலைவாய்ப்பு முகாமை ஒத்திவைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வேலை தேடும் இளைஞர்கள், இளம் பெண்கள் இந்த கூடுதல் கால நீட்டிப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா இருந்தார்.
Tags:    

Similar News