செய்திகள்
சிறப்பு ரெயில்

4ந் தேதி முதல் நெல்லை-பாலக்காடு சிறப்பு ரெயில் இயக்கம்

Published On 2021-01-02 09:28 GMT   |   Update On 2021-01-02 09:28 GMT
வருகிற 4-ந் தேதி முதல் நெல்லை-பாலக்காடு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
நெல்லை:

நெல்லை சந்திப்பில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலும் மீண்டும் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் சிறப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது.

நெல்லை-பாலக்காடு சிறப்பு ரெயில் நெல்லை சந்திப்பில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.50 மணிக்கு பாலக்காடு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் 5-ந் தேதி முதல் பாலக்காட்டில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு நெல்லைக்கு வந்து சேருகிறது.

இந்த ரெயில்கள் சேரன்மாதேவி, அம்பை, தென்காசி, கொல்லம், பெரிநாடு, முன்றோற்றுற்று, சாஸ்தான் கோட்டை, கருநாகப்பள்ளி, ஒச்சிரா, காயன்குளம், மாவெலிகரா, செறியநாடு, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், குருப்பண்துறா, வைக்கம் ரோடு, பிரவம் ரோடு, முலன்றுருட்டி, திருப்புணிதுறா, எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர், ஒட்டப்பாலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதில் நெல்லை -பாலக்காடு சிறப்பு ரெயில் பாவூர்சத்திரம் மற்றும் கிளிகொல்லூர் ரெயில் நிலையங்களிலும், பாலக்காடு -நெல்லை சிறப்பு ரெயில் கீழக்கடையம் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும். இந்த ரெயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 4, இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள் 8, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் 2 இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயிலில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும்.

இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே கீழக்கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில் நிலையங்களில் இந்த ரெயிலை இருமார்க்கத்திலும் நின்று செல்ல உத்தரவிட வேண்டும் என்று அந்த பகுதி பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News