செய்திகள்
விபத்து

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 102 பேர் உயிரிழப்பு

Published On 2021-01-02 09:20 GMT   |   Update On 2021-01-02 09:20 GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 102 பேர் உயிரிழந்துள்ளனர். போக்சோ சட்டத்தில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 102 பேர் உயிரிழந்துள்ளனர். போக்சோ சட்டத்தில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை 17,474 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 220 வழக்குகள் திருட்டு வழக்குகள் ஆகும் இதில் 60 சதவீத வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் தொடர்புடைய குற்றவாளிகள் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், பாலியல் தொடர்பான வழக்குகளில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், சாராயம், கஞ்சா, குட்கா, போதைப் பொருட்கள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 51 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த 75 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன அதன் பயனாக 2020 ஆம் ஆண்டு மாவட்டம் முழுவதும் 100 சாலை விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 102 பேர் உயிரிழந்துள்ளனர.

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் குறைவாகும். வரும் ஆண்டுகளில் விபத்துகளை குறைக்க காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினர் எவ்வளவுதான் முயற்சிகள் எடுத்தாலும் வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News