செய்திகள்
சோனியா காந்தி

தமிழக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிகளை கவனிக்க கமிட்டிகள் அமைப்பு -சோனியா காந்தி உத்தரவு

Published On 2021-01-02 09:04 GMT   |   Update On 2021-01-02 09:04 GMT
தமிழக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிகளை கவனிக்க, தனித்தனியாக கமிட்டிகளை அமைத்து கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. அத்துடன் மக்கள் ஆதரவை திரட்டவும், கட்சியின் பலத்தை அதிகரிக்கவும் நிர்வாக அளவில் மாற்றங்கள் செய்தன. தமிழக காங்கிரஸ் கட்சியும் மாநில அளவில் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. 

தேர்தலுக்கு சில மாதங்கள் இருப்பதால் மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகளை உடனே நியமிக்கும் பணிகளை தொடங்கியது. மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி புதிய நிர்வாகிகளுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிகளை கவனிக்க ஏதுவாக தனித்தனியாக கமிட்டிகளை அமைத்து கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். மேலும் துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, மறைந்த எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் உள்ளிட்ட 57 பேர் தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோபண்ணா உள்ளிட்ட 32 பேர் துணைத் தலைவர்களாகவும், 104 பேர் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாளராக ரூபி ஆர்.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். 32 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவையும் சோனியா காந்தி அறிவித்துள்ளார். பீட்டர் அல்போன்ஸ் தலைமையிலான இந்த குழுவில் மொத்தம் 24 பேர் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்கை நாராயணன், மணி சங்கர் ஐயர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் தேர்தல் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் டி.செல்வம், பொன்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஏ.வாசு, பி.சேரன், வழக்கறிஞர் அருண் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, ப.சிதம்பரம் எம்பி, டாக்டர் ஏ.செல்லக்குமார் எம்பி, மாணிக்கம் தாகூர் எம்பி உள்ளிட்ட மொத்தம் 34 பேர் இடம்பெற்றுள்ளனர். 

ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் 19 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, கோபண்ணா தலைமையில் 16 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழு, கே.வி.தங்கபாலு தலைமையில் 31 பேர் கொண்ட விளம்பரக் குழு, திருநாவுக்கரசர் எம்பி தலைமையில் 38 பேர் கொண்ட பிரசார குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News