செய்திகள்
ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவசண்முகராஜா பேசியபோது எடுத்த படம்.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆலோசனை கூட்டம்

Published On 2021-01-01 05:07 GMT   |   Update On 2021-01-01 05:07 GMT
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி குறித்த ஆலோசனை கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவசண்முகராஜா தலைமையில் நடந்தது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தியாகும் நபர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் பதிவு செய்து கொள்ளாதவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்வதற்கு ஏதுவாக, சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் கடந்த நவம்பர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை நடைபெற்றது.

இதையொட்டி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அவைகள் கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியலானது வருகிற 20-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளை பார்வையிட வாக்காளர் பட்டியல் பார்வையாளராக தமிழ்நாடு செய்திதாள்கள் மற்றும் காகிதங்கள் துறை மேலாண்மை இயக்குனர் சிவசண்முகராஜா தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் அவரது தலைமையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் மெகராஜ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் கோட்டைக்குமார், மணிராஜ், தாசில்தார் (தேர்தல்) சுப்பிரமணியம் மற்றும் தேர்தல் பணி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க கிடங்கு ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கிடங்கு திறக்கப்பட்டு அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணி அங்கு நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.
Tags:    

Similar News