செய்திகள்
தண்டவாளத்தில் அறுந்து கிடந்த உயர் மின்அழுத்த கம்பியை ரெயில்வே ஊழியர்கள் சரிசெய்வதை படத்தில் காணலாம்.

தண்டவாளத்தில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து கிடந்ததால் பரபரப்பு

Published On 2020-12-31 02:01 GMT   |   Update On 2020-12-31 02:01 GMT
திருவள்ளூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர்:

திருவள்ளூரில் இருந்து சென்னை வரை செல்லும் ரெயில் மார்க்கத்தில் ஏராளமான ரெயில்கள் தினந்தோறும் சென்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று காலை 8.30 மணி அளவில் திருவள்ளூர் அருகே புட்லூர்-செவ்வாய்பேட்டை ரெயில் மார்க்கத்தில் நிலங்களுக்கு இடையே இருந்த உயர் மின் அழுத்த கம்பி திடீரென அறுந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்தது.

இதைத்தொடர்ந்து, ஏற்பட்ட பரபரப்பில் திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதுபற்றி உடனடியாக திருவள்ளூரில் உள்ள ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெயில்வே தண்டவாளத்தில் அறுந்து கிடந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அறுந்து கிடந்த மின் கம்பியை இணைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருவள்ளூரில் இருந்து சென்னை மற்றும் திருத்தணி, அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, மாற்று வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தில் இயக்கினர். இதைத்தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் ரெயில்வே ஊழியர்கள் அறுந்து கிடந்த மின் கம்பியை சீரமைத்தனர். அதைத்தொடர்ந்து, அந்த வழியாக ரெயில் போக்குவரத்து சீரானது. இதன் காரணமாக நேற்று திருவள்ளூர் ரெயில் மார்க்கம் வழியாக 2 மணிநேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து, பயணிகள் அவதியுற்றனர்.
Tags:    

Similar News