செய்திகள்
சென்னை ஐகோர்ட்

அதிகாரிகள் வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத்தொகை- ஐகோர்ட்

Published On 2020-12-31 01:55 GMT   |   Update On 2020-12-31 02:26 GMT
அதிகாரிகள் வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத்தொகை ரூ.2,500 வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தி.மு.க அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்படுகிறது. அந்த டோக்கனில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள், ஆளுங்கட்சியின் தேர்தல் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அரசு திட்டத்தில் இதுபோல ஆளுங்கட்சியினர் சுய விளம்பரம் செய்வது, இந்திய தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானதாகும். தகுதியுள்ள பயனாளிகளுக்கு இந்த தொகை போய் சேராது. முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த வகையான டோக்கன்களை வழங்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்கும்படி நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் பி.வில்சன் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை நேற்று மாலையில் விசாரித்தனர். அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் வாயிலாக டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் 2 மாவட்டங்களில் மட்டும் ஆர்வமிகுதியால் கட்சியினர் சிலர் அ.தி.மு.க. தலைவர்களின் புகைப்படத்துடன் கூடிய டோக்கன்களை வழங்கியுள்ளனர். எனவே அதிகாரிகள் வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த சுற்றறிக்கையை இன்று மாலை 5 மணிக்குள் அரசு வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடவில்லை என்றால் மனுதாரர் இந்த நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம் என்று உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News