செய்திகள்
எல்.முருகன்

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது -எல்.முருகன்

Published On 2020-12-30 10:55 GMT   |   Update On 2020-12-30 10:55 GMT
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், தி.மு.க. மக்களிடம் இரட்டை வேடம் போடுவதாகவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.

அண்ணாநகர்:

அண்ணாநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜனதா சட்டமன்ற தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அகில இந்திய பாஜக பொதுச் செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி தலைமை தாங்கினார். மாநில தலைவர் எல் முருகன் முன்னிலை வகித்தார்.

பா.ஜனதா இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, இல.கணேசன், எச்.ராஜா, லட்சுமணன், நடிகை குஷ்பு உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் எல் முருகன் பேசியதாவது:-

தமிழக பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

தி.மு.க. மக்களிடம் ரெட்டை வேடம் போடுகிறது. மும்மொழி கொள்கையை எதிர்ப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தி.மு.க. கட்சியினர் நடத்தும் 69 பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்படுகிறது.

நான் முன்பு எஸ்.சி. எஸ்.டி . வாரிய தலைவராக இருந்த போது முரசொலி அறக்கட்டளையின் சொத்து எஸ்.இ., எஸ்.டி.யினரின் பஞ்சமி நிலம் என்று கூறினேன். அதற்கான மூலப் பத்திரத்தை வெளியிட முடியுமா? என்று கேட்டேன். என் மீது ஒருகோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

எந்த வழக்கையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். திமுக மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற முயற்சி செய்து வருகிறது. அது நடைபெறாது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கும். பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவில் வந்து இணைகிறார்கள்.

கிராமப்புறங்களில் பா.ஜனதாவை வளர்க்க அனைவரும் பாடுபட வேண்டும். அனைத்து கிராம பஞ்சாயத்து அலவலகங்களிலும் பிரதமர் மோடி படத்தை வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய பலர் பா.ஜனதாவில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் சி.டி.ரவி வழங்கினார்.

கூட்டம் முடிந்ததும் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்கு பிறகு முடிவு செய்வோம். அகில இந்திய பாஜக அதை அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் வேட்பாளர் குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பா.ஜனதா மேலிடம்தான் அறிவிக்கும் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் கட்சியின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News