செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டில் பீரோ திறந்து கிடந்ததை காணலாம்

பேக்கரி கடை ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

Published On 2020-12-30 03:32 GMT   |   Update On 2020-12-30 03:32 GMT
நாகர்கோவிலில் பேக்கரி கடை ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை போனது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் இடலாக்குடி ரகுமத் கார்டன் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஹமீது பாது‌ஷா (வயது 45). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த 2 நாட்களுக்கு முன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலையில் ஹமீது பாது‌ஷா வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார்.

வேலை முடிந்து அன்று இரவு சுமார் 11 மணி அளவில் அவர் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதற்குள் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த சாவி மூலம் பீரோ திறக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து ஹமீது பாது‌ஷா போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயும் கொண்டுவரப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பேக்கரி ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே உள்ளூர் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை பார்வையிட்டும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News