செய்திகள்
முககவசம்

மின்சார ரெயில்களில் முககவசம் அணியாமல் மீண்டும் வியாபாரம்

Published On 2020-12-29 12:44 GMT   |   Update On 2020-12-29 12:44 GMT
ரெயில்வே போலீசாரும், ஊழியர்களும் ரெயில்களில் வியாபாரம் செய்யும் ஊழியர்களிடம் முககவசம் அணியவேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மின்சார ரெயில்களில் சிறு வியாபாரிகள் எப்போதுமே அதிகளவில் காணப்படுவார்கள். சுண்டல், கடலை, காய்கறிகள், பழங்கள், பூ, பிஸ்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்களை கூடைகளில் எடுத்துக் கொண்டு மின்சார ரெயில்களில் அதிகளவில் பலர் விற்பனை செய்வது வழக்கம்.

கொரோனா பரவலால் மின்சார ரெயில் பயணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வியாபாரிகள் பலரும் மின்சார ரெயில்களில் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்ய தொடங்கி உள்ளனர். அவர்களின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு வியாபாரத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

அதே நேரத்தில் ரெயில்வே போலீசாரும், ஊழியர்களும் ரெயில்களில் வியாபாரம் செய்யும் ஊழியர்களிடம் முககவசம் அணியவேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெருவோர வியாபாரிகளும் முககவசம் அணியும் பழக்கத்தை முற்றிலுமாக மறந்துவிட்டனர். குறிப்பாக வயதான பெண்கள் பலர் எந்தவித பயமும் இன்றி சாலையோரமாக காலை முதல் மாலை வரை முககவசத்தை அணியாமலேயே அமர்ந்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.

இதுபோன்ற இடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்கள். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் முககவசங்களை எடுத்துக் கொண்டு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். முககவசம் அணியாமல் இருப்பவர்களை பார்த்தால், தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி முககவசம் அணிவிப்பதுடன் விழிப்புணர்வு பிரசாரத்தையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News