செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி -அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

Published On 2020-12-28 10:09 GMT   |   Update On 2020-12-28 10:09 GMT
மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:

அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் கடந்த சில தினங்களாக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாஜக வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என்று கூறுவது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு அமைச்சர்கள் அவ்வப்போது பதில் அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வர் வேட்பாளர் சர்ச்சை குறித்து அமைச்சர் ஜெயக்குமார்
  மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி தொடரும் என்றும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக  தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

‘மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியில் தற்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. முதல்வர் வேட்பாளர் குறித்து தமிழக பாஜக  தலைவர்களின் கருத்து ஏற்புடையதாக இருக்காது. டெல்லி (பாஜக தலைமை) அறிவிப்பே இறுதியானது’ என்றும் அமைச்சர் கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News