செய்திகள்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த ஆட்டோ டிரைவர்களை படத்தில் காணலாம்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

Published On 2020-12-22 11:18 GMT   |   Update On 2020-12-22 11:18 GMT
ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு மனுக்கள் போடுவதற்காக தனிப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட 3 பிளஸ் 1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம், பொதுச் செயலாளர் மல்லீஸ்குமார், பொருளாளர் சிவசங்கர் ஆகியோர் தலைமையில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆட்டோக்களில் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையின் பின்புறம் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும், இன்னும் அகற்றப்படவில்லை. இதனால் அந்தப்பகுதி ஆட்டோக்கள் நிறுத்துவதற்கு இடையூறாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற உடனடியாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 19 மனுக்களும், வேப்பந்தட்டையில் 6 மனுக்களும், குன்னத்தில் 14 மனுக்களும், ஆலத்தூரில் 3 மனுவும், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியில் இருந்து 85 மனுக்களும் என மொத்தம் 127 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.
Tags:    

Similar News