செய்திகள்
திருட்டு

சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

Published On 2020-12-19 08:36 GMT   |   Update On 2020-12-19 08:36 GMT
மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் பிரசித்தி பெற்ற நாகநாதசாமி கோவில்(சிவன்கோவில்) உள்ளது. இந்த கோவில் அர்ச்சகராக மதுக்கூர் வடக்கு பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு கணேஷ் சென்று விட்டார். நேற்று காலை வழக்கம்போல் பூஜை செய்ய கோவிலுக்கு அவர் வந்த போது கோவிலின் முன்பக்க இரும்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் உண்டியலில் இருந்த பணமும் கொள்ளை போய் இருந்தது. இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் பார்வையிட்டனர். மேலும் கோவிலில் இருந்த விலை உயர்ந்த சிலைகள் மர்ம நபர்களின் கொள்ளை முயற்சியில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கோவில் செயல் அலுவலர் சந்திரமோகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். சிவன் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News