செய்திகள்
கமல்ஹாசன் - ரஜினிகாந்த்

காலங்கள் கடந்த பிறகும் அரசியலில் ஓங்கி ஒலிக்கும் எம்.ஜி.ஆர். குரல்: ரஜினி-கமலுக்கு கை கொடுக்குமா?

Published On 2020-12-18 10:06 GMT   |   Update On 2020-12-18 10:44 GMT
தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்கென்று இப்போதும் தனி செல்வாக்கும், ஓட்டு வங்கியும் உள்ளது. அதனை தேர்தலில் அறுவடை செய்யும் எண்ணத்திலேயே ரஜினியும், கமலும் அவரது பெயரை சொல்லி பிரசாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.
சென்னை:

எம்.ஜி.ஆர். தமிழக அரசியலில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் முதன்மையானவர். “வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்களின் மனதில் நிற்பவர் யார்?” என்ற அவரது பாடலுக்கு ஏற்ப காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

சினிமாவில் தனது பாடல்கள் மற்றும் புரட்சிகரமான வசனங்களால் மக்களை ஈர்த்த எம்.ஜி.ஆர். அரசியலிலும் கொடி கட்டி பறந்தார்.

சினிமாவில் மாபெரும் வெற்றியை ஈட்டியது போல அரசியல் களத்திலும் தனி முத்திரை பதித்தார்.

தி.மு.க.வில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர். கருத்து வேறுபாடு காரணமாக 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார். முதல் தேர்தலிலேயே திண்டுக்கல் தொகுதியில் அவரது கட்சி வெற்றி பெற்றது.

பின்னர் 1977-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆனார். சாகும் வரை முதல்-அமைச்சராகவே இருந்தார். 1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நோய் வாய்ப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். பிரசாரத்துக்கு செல்லாமலேயே வெற்றி பெற்றார். அந்த அளவுக்கு மக்களின் மனதை அவர் வென்று இருந்தார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஆட்டம் கண்ட அ.தி.மு.க.வை ஜெயலலிதா கட்டுக்கோப்பாக வழி நடத்தினார். அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆரின் வாக்குகளே இப்போதும் அ.தி.மு.க.வை பலம் வாய்ந்த கட்சியாக வைத்துள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவி இருந்த போதிலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு இணையான வெற்றியை பெற்றது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரின் செல்வாக்கே இதற்கு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் களம் முற்றிலும் மாறுபட்டதாகவே மாறி இருக்கிறது.

கருணாநிதி இல்லாத நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. உள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வை வழி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் ஆட்சியில் அமரும் முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

இப்படி 2 கட்சிகளும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினியும், கமலும் புதிதாக களம் இறங்கி உள்ளனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க.வுக்கு போட்டியாக எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.

அ.தி.மு.க. நடத்தும் கூட்டங்களில் இப்போதும் எம்.ஜி.ஆர். பாடல்களும், பேச்சுக்களும் மறக்காமல் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பாடல்களை போட்டும், அவரது பெயரை சொல்லியும் ஓட்டு கேட்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஆனால் அரசியலில் புதிய தலைவர்களாக அவதாரம் எடுத்துள்ள ரஜினியும், கமலும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். எம்.ஜி.ஆர். தந்த ஏழைகளின் ஆட்சியை என்னால் தர முடியும் என்று ஏற்கனவே ரஜினி கூறியிருந்த நிலையில், கமல் ஒரு படி மேலே சென்று, நான் எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி, வாரிசு என்று மேடைகள் தோறும் பேசி வருகிறார்.

“நாளை நமதே” என்கிற எம்.ஜி.ஆரின் பாடலையும், தனது பிரசார கோ‌ஷமாக கமல் முன்னெடுத்து செல்கிறார். எம்.ஜி.ஆர். பாடலை போட்டு டுவிட் செய்து அ.தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரத்திலும் கமல் ஈடுபட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். மரணம் அடைந்து 33 ஆண்டுகள் ஓடி விட்டன. இப்படி காலங்கள் கடந்த பிறகும் தமிழக அரசியல் களத்தில் எம்.ஜி.ஆரின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு அவர் விட்டுச் சென்றுள்ள ‘மக்கள் ஆதரவே’ முழுமையான காரணமாகும்.

தமிழக அரசியலில் எம்.ஜி. ஆருக்கென்று இப்போதும் தனி செல்வாக்கும், ஓட்டு வங்கியும் உள்ளது. அதனை தேர்தலில் அறுவடை செய்யும் எண்ணத்திலேயே ரஜினியும், கமலும் அவரது பெயரை சொல்லி பிரசாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.

இதற்கு அ.தி.மு.க.வினர் பதிலடியும் கொடுத்து வருகிறார்கள். கமலுக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தாலேயே எம்.ஜி.ஆரின் பெயரை அவர் கூறி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

எம்.ஜி.ஆர். ஆட்சியை தருவேன் என்று ரஜினி கூறிய கருத்துக்கும், அ.தி.மு.க.வினர் முன்பு பதில் அளித்துள்ளனர். நாங்கள் நடத்தி வருவதே எம்.ஜி.ஆரின் ஆட்சிதான் என்று ரஜினிக்கும், அ.தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி தேர்தல் களத்தில் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்க தொடங்கி உள்ள ரஜினிக்கும், கமலுக்கும் அது எந்த அளவுக்கு கை கொடுக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News