செய்திகள்
சென்னை ஐகோர்ட்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

Published On 2020-12-18 09:58 GMT   |   Update On 2020-12-18 09:58 GMT
சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:

2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை, சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் அனந்தபாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் குரல் கொடுத்து வரும் நிலையில், இதற்கான உத்தரவை மத்திய அரசுக்கு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  சாதி இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற பாதையை நோக்கி செல்லும் நிலையில், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஏன் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள்? என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் மக்களை பிளவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்திலும், ஆட்சியை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் நீதிபதிகள் கூறினர்.

அதேசமயம், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையிலான ஆணையத்தை அரசு அமைத்துள்ளது. இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான இந்த மனுவை ஏற்க முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 
Tags:    

Similar News