செய்திகள்
சசிகலா

சசிகலா விடுதலைக்கு சிறைத்துறை முன்னேற்பாடு

Published On 2020-12-17 10:37 GMT   |   Update On 2020-12-17 10:37 GMT
சசிகலா விடுதலை செய்யப்படும் அன்று சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் என்னென்ன முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கர்நாடக உள்துறை பெங்களூர் மாநகர போலீசுக்கு சுற்றறிக்கை வழங்கியுள்ளது.
சென்னை:

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா நீதிமன்ற உத்தரவுப்படி 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி விட்டார்.

இதேபோல் இளவரசியும் அபராதத்தொகையை செலுத்தி உள்ளார். ஆனால் சுதாகரன் மட்டும் இன்னும் அபராதத்தொகையை கட்டவில்லை. இதற்கான ஏற்பாடுகளை அவரது வக்கீல் தீவிரமாக மேற்கொண்டுள்ளார்.

வருகிற பிப்ரவரி மாதம் இவர்களது சிறை தண்டனை முடிவுக்கு வந்தாலும் சசிகலாவின் நன்னடத்தையை காரணம் காட்டி அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் இன்னும் சசிகலா விடுதலையில் சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார்? என்று கேட்டதற்கு ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவித்து இருந்தது.

எனவே அதற்கு முன்பாக அவர் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே தெரிகிறது. சசிகலா விடுதலை தொடர்பாக அவருக்கு சிறைத்துறையில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை என்று வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். சிறைத்துறையின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சசிகலா விடுதலை செய்யப்படும் அன்று ஆயிரக்கணக்கான அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் சிறை வாசல் முன்பு கூடக்கூடும் என்பதால் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் என்னென்ன முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கர்நாடக உள்துறை பெங்களூர் மாநகர போலீசுக்கு சில சுற்றறிக்கை வழங்கியுள்ளது.

சசிகலா விடுதலை செய்யப்படும் தேதியை சிறை நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறை வளாகத்தை சுற்றிலும் செய்ய வேண்டும்.

சசிகலாவை வரவேற்று அழைத்து செல்வதற்கு ஏராளமான வாகனங்களில் தொண்டர்கள் வருவார்கள் என்பதால் அன்றைய தினம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் நகரின் எல்லையிலேயே வாகனங்களை தடுத்து நிறுத்த வேண்டும். அவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை அவரது வாகனத்துக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்க வேண்டும்.

அன்றைய சூழ்நிலையை பொறுத்து போக்குவரத்து மாற்றங்களை செய்து, முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News