செய்திகள்
விக்கிரமராஜா

விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்- விக்கிரமராஜா

Published On 2020-12-17 09:04 GMT   |   Update On 2020-12-17 09:04 GMT
திருச்சியில் வருகிற 22-ந்தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் சார்பில் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
வள்ளியூர்:

கொரோனா தொற்று பேரிடர் காலங்களில் வணிகர்களின் பாதிப்பு குறித்த கலந்தாய்வு பணிகளை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நிர்வாகிகளுடன் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நெல்லை மாவட்டம் வள்ளியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நடந்த கலந்தாய்வு கூட்டங்களில் அவர் கலந்து கொண்டார்.

பின்னர் வள்ளியூரில் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளும், வணிகர்களும் என்றுமே ஏரில் பிணைத்த இரு காளைகள் போல் உள்ளனர். விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தார்மீக ஆதரவு அளித்ததோடு அவர்கள் நடத்திய போராட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தின் தீவிரத்தை அறிந்து முதல் கட்டமாக திருச்சியில் வருகிற 22-ந் தேதி வணிகர்கள் சார்பில் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தப்படும். 2-ம் கட்டமாக உண்ணாவிரத போராட்டமும், 3-ம் கட்டமாக தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டத்தையும் நடத்த உள்ளோம்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் தேர்தல் தேதி அறிவித்த பிறகு ஆட்சி மன்ற கூட்டத்தை கூட்டி முடிவு செய்து யாருக்கு ஆதரவு? என்பதை தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில தலைமை செயலாளர் ராஜகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News