செய்திகள்
சைக்கிளில் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

குமரி கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணிக்கு சைக்கிளில் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

Published On 2020-12-17 05:55 GMT   |   Update On 2020-12-17 05:55 GMT
குமரி கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அரசு வாகனத்தில் வருவதை தவிர்த்து சைக்கிளில் வந்தது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சாம்சன். இவர் இயற்கையை காப்பதிலும், சுற்றுச்சூழலை பேணுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதற்காக இவர் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை நடத்தியுள்ளார்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குமரி மாவட்டத்தில் பணியாற்றினார். பின்னர் நெல்லை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது குமரி மாவட்டத்துக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ள இவர் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (ரெட்ஸ்டார்) கட்சியினரின் மறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி இன்ஸ்பெக்டர் சாம்சன் அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டார். இதற்காக அவர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு சீருடையில் சைக்கிளில் வந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அரசு வாகனத்தில் வருவதை தவிர்த்து சைக்கிளில் வந்தது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. சக போலீசாரும் சாம்சன் சைக்கிளில் வந்ததைப் பார்த்து அதிசயித்தனர். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, சைக்கிளில் செல்வதன்மூலம் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது. நல்ல உடற்பயிற்சியும்கூட. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்கிள் பயணம் உறுதுணையாக இருக்கும் என்றார்.
Tags:    

Similar News