செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

சென்னையில் 39 கிராம நிர்வாக அலுவலகங்களில் பா.ம.க.வினர் மனு

Published On 2020-12-14 08:53 GMT   |   Update On 2020-12-14 08:53 GMT
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு சென்னையில் 39 கிராம நிர்வாக அலுவலகங்களில் பா.ம.க.வினர் மனு அளித்தனர்.
சென்னை:

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒடுக்கீடு மற்றும் அனைத்து சாதியினருக்கும் அந்த அந்த சாதிகளின் விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க கோரி பா.ம.க. போராட்டம் நடத்தி வருகிறது.

அதன் ஒரு கட்டமாக இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களிடமும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்து இருந்தார்.

அதன்படி அனைத்து கிராமநிர்வாக அலுவலகங்களுக்கும் பா.ம.க. வினர் திரண்டு சென்று மனு கொடுத்தனர்.

சென்னை அடுத்த மாம்பாக்கத்தில் பா.ம.க இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி எம்.பி. மனு கொடுத்தார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அமைந்தகரை புல்லா அவென்யூவில் உள்ள கிராம நிர்வாக அதிகாரியிடம் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மனு அளித்தார். அவருடன் வக்கீல் பாலு கலந்து கொண்டார்.

மாம்பாக்கத்தில் மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், கிண்டியில் துணை பொது செயலாளர் தி.இரா.சகாதேவன் உள்பட 39 கிராம நிர்வாக அலுவளர்களிடம் பா.ம.க.வினர் மனு அளித்தனர்.

அதேபோல் அம்பத்தூரில் துணைபொதுசெயலாளர் கே.என்.சேகர், மாவட்ட தலைவர் பாண்டுரங்கள் முகப்பேரிலும், மகளிர் அணி மாநில செயலாளர் சசிகலா ஜெயராமன் ஒரகடத்திலும், மாதவரத்தில் மாவட்ட செயலாளர் ஞானபிரகாசம், ஆவடியில் துணை அமைப்பு செயலாளர் அனந்தகிருஷ்ணன் உள்பட திருவள்ளூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள 537 கிராம நிர்வாக அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கச்சூர் ஆறுமுகம் உள்பட முக்கிய நிர்வாகிகள் மொத்தம் உள்ள 363 கிராம நிர்வாக அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.

காஞ்சிபுரத்தில் மாவட்ட செயலாளர் உமாபதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் மாவட்டத்தில் உள்ள 295 கிராம நிர்வாக அலுவலகங்களிலும் மனு கொடுத்தனர்.

தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 640 கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்பட அனைத்து அலுவலகங்களிலும் சுமார் 2½ கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி மனு அளித்துள்ளதாக வடக்கு மண்டல இணை பொதுசெயலாளர் ஏ.கே.மூர்த்தி கூறினார்.
Tags:    

Similar News