செய்திகள்
கிருஷ்ணா தண்ணீர்

சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா தண்ணீர் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு

Published On 2020-12-11 07:05 GMT   |   Update On 2020-12-11 07:05 GMT
சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா தண்ணீர் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுவரை 4.03 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து இருக்கிறது.
சென்னை:

ஆந்திர அரசு ஒப்பந்தப்படி சென்னை குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீரை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா தண்ணீர், தெலுங்கு கங்கை கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு வந்து சேரும். அங்கிருந்து புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

வருடத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் இருந்தாலும் இதுவரை எந்த ஆண்டும் முழுமையாக தண்ணீர் பெறப்படவில்லை. இந்த ஆண்டு முதல் தவணையாக சென்னை குடிநீர் தேவைக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று செப்டம்பர் மாதம் ஆந்திர மாநில அரசிடம் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதையடுத்து, கண்டலேறு அணையில் இருந்து செப்டம்பர் மாதம் 18-ந்தேதி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆந்திர அரசு உறுதியளித்தபடி நேற்று வரை 4.03 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து இருக்கிறது.

தொடர்ந்து, கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 591 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. எனவே, கண்டலேறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது.

மழை நன்றாக பெய்துள்ளதால் மீதம் உள்ள 8 டி.எம்.சி. தண்ணீரையும் ஆந்திர அரசு வழங்க வாய்ப்புள்ளது. அடுத்த தவணையில் இதை பெற தமிழக அரசின் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News