செய்திகள்
சூர்யா

கைதான ‘டிக்டாக்’ புகழ் சூர்யா-புரோக்கர் சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிப்பு

Published On 2020-12-10 09:29 GMT   |   Update On 2020-12-10 09:29 GMT
விபசார வழக்கில் கைதான சூர்யா மற்றும் புரோக்கர் தினேஷ் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி:

திருச்சி மாநகர பகுதிகளில் சமீப காலமாக குடியிருப்பு பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக அளவில் விபசார தொழில் நடப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் அழகுநிலையம், ஸ்பா சென்டர் என்ற பெயர்களில் விபசார தொழில் கொடி கட்டி பறந்தது.

இதில் ஈடுபடுவோர்களை அவ்வப்போது மாநகர போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தபோதிலும் ஒரு பக்கம் புற்றீசல் போல் ஸ்பா சென்டர்கள் அதிகரித்து வந்தன. இளம்பெண்களின் வறுமையை பயன்படுத்தி வேலை வாங்கி தருவதாக கவர்ச்சி விளம்பரங்களை வெளியிட்டு நாடி வரும் பெண்களை விபசார தொழில் ஒரு கும்பல் ஈடுபடுத்தி வந்தது.

இந்த நிலையில் திருச்சி பொன்மலை ஜி. கார்னர் மைதானம் அருகே சர்வீஸ் ரோட்டில் உள்ள ஒரு வளாகத்தில் சன் ஸ்பா சென்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திறக்கப்பட்டது. இந்த ஸ்பா சென்டரில் தொடங்கிய நாள் முதல் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு திருச்சி தனிப்படை போலீசார் அங்கு மாறுவேடத்தில் வாடிக்கையாளர்கள் போல் சென்று கண்காணித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் விபசாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. அங்கு விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தப்பட்ட பிரதீபா, மாலதி என்ற 2 பெண்களை போலீசார் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த ஸ்பா சென்டரின் உரிமையாளரும், டிக்டாக்கில் பிரலமான ரவுடி பேபி என்றழைக்கப்படும் சூர்யா (வயது 34), மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த புரோக்கர் தினேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகரில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் பரவலாக விபசாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் உறையூர் அண்ணாமலை நகர் உணா ஸ்பா, தில்லைநகரில் குப்தா ஸ்பா, வேதா ஸ்பா, ஆர்ச்சிஸ்ட் ஸ்பா, பொன்மலை ஜி. கார்னர் அருகே சன் ஸ்பா ஆகிய சென்டர்களில் விபசாரம் நடைபெறுவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஸ்பா சென்டர்களில் விபசாரம் நடத்தி வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 12 பெண்களை மீட்டு அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபோன்ற ஸ்பா சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர கமி‌ஷனர் லோகநாதன் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே கைதான ரவுடி பேபி சூர்யா மற்றும் புரோக்கர் தினேஷ் ஆகியோர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருப்பூர் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சூர்யா. பிரபலங்களின் டிக்டாக் வீடியோ அதிகம் பகிரப்படுகிறதோ இல்லையோ சூர்யாவின் டிக்டாக் வீடியோக்கள் மிகவும் பகிரப்படும் ஒரு வீடியோவாகும். இவர் தனக்கு தாமே ‘ரவுடி பேபி’ என்ற பட்டத்தையும் சூட்டிக் கொண்டார். பின்பு ‘ரவுடி பேபி சூர்யா’ என அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி பின்பு காணாமல் போய்விடுவார்.

அந்தவகையில் தற்போது டிக்டாக் வீடியோவுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். விபசார வழக்கில் கைதான சூர்யா மற்றும் புரோக்கர் தினேஷ் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News