செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

கவர்னரை சூரப்பா சந்தித்தாரா?- புகார் தொடர்பாக விளக்கம் அளித்ததாக தகவல்

Published On 2020-12-10 02:18 GMT   |   Update On 2020-12-10 02:18 GMT
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியதாக கூறப்பட்டதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அவரை சந்தித்து உரிய விளக்கத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சென்னை:

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது வந்த ஊழல் புகாரை விசாரிப்பதற்கு அரசு தரப்பில் இருந்து சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டார். அவரும் தன்னுடைய விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் ஊழல் புகாரை மறுத்த சூரப்பா, ‘நான் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியது கிடையாது’ என்றும், விசாரணை நடத்தப்படட்டும் என்றும் தெரிவித்து வந்தார். இதுதொடர்பாக கவர்னரை சந்திப்பீர்களா? என்று நிருபர்கள் கேட்டபோது, இல்லை என்று கூறினார்.

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி, விசாரணை அலுவலகத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து வருகிறார்.

இதற்கிடையில், ‘அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த உத்தரவிட்டது சரியல்ல என்றும், அதனை உடனடியாக முடிக்க வேண்டும்’ என்றும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதுகுறித்து அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, தகவலாக கூறப்படும் விஷயத்துக்கு எந்த கருத்தையும் கூறமுடியாது என்று தெரிவித்தார்.

இந்த பரபரப்பான சூழலில், துணைவேந்தர் சூரப்பா, தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித்தை நேரில் சென்று சந்தித்ததாக நேற்று பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அப்போது அவர் மீதான புகார் குறித்த விளக்கங்களை கவர்னரிடம் தெரிவித்ததாகவும் பேசப்பட்டது. இதுகுறித்து சூரப்பாவிடம் உறுதி செய்ய பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் செல்போனில் தொடர்பு கொண்ட போது, ‘நான் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது’ என்று கூறி தொடர்பை துண்டித்துவிட்டார்.
Tags:    

Similar News