செய்திகள்
தமிழக அரசு

நிவர் புயல் சேதம்- முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை ஒதுக்கியது தமிழக அரசு

Published On 2020-12-09 03:38 GMT   |   Update On 2020-12-09 07:33 GMT
நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னை:

வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த மாதம் 26-ந்தேதி மாமல்லபுரம்-மரக்காணம் இடையே கரையை கடந்தது.

இதன் காரணமாக கடலூர், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை புறநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது.

புயல் மழைக்கு 4 பேர் பலியானார்கள். ஏராளமான நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. வாழை, பப்பாளி, தென்னை மரங்கள் சாய்ந்தன. மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டது. மின் கம்பங்களும் சாய்ந்தன. பாலங்களிலும் உடைப்பு ஏற்பட்டது.

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர் வர இருந்த நிலையில் அடுத்ததாக புரெவி புயலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதையொட்டி மழை வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் கடந்த 2 நாட்களாக பார்வையிட்ட பிறகு நேற்று டெல்லி திரும்பினார்கள்.

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சேதங்களை சீரமைக்க தமிழக அரசு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிதியில் இருந்து பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், மின் கம்பங்களை மாற்றவும், புதிதாக பாலங்கள் கட்டவும், தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதியில் சென்னை மாநகராட்சிக்கு மட்டும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.10 கோடியும், நீர் நிலைகளில் ஏற்பட்ட உடைப்புகளை சரி செய்ய ரூ.20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் ரூ.74.24 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News