செய்திகள்
எஸ்ஆர் ராதா

எஸ்.ஆர்.ராதா மரணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

Published On 2020-12-09 01:55 GMT   |   Update On 2020-12-09 01:55 GMT
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த எஸ்.ஆர்.ராதா உடல்நலக்குறைவால் சென்னையில் மரணமடைந்தார். அவரது உடல் தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
சென்னை:

தமிழகத்தின் முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, வீட்டு வசதித் துறை அமைச்சராகவும், ஜெயலலிதா கட்சித் தலைமை பொறுப்பை ஏற்றபோது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர் குடந்தை எஸ்.ஆர்.ராதா. சென்னை பெசன்ட்நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு, சிறுநீரக பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 6-ந்தேதி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 86. அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக கும்பகோணத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு சென்று வைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

அவரது மறைவுக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News