செய்திகள்
சென்னை தேனாம்பேட்டையில் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

11-ந் தேதி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம்

Published On 2020-12-09 00:49 GMT   |   Update On 2020-12-09 00:49 GMT
மருத்துவ துறைகளை ஒருங்கிணைப்பதை கண்டித்து தமிழகத்தில் வரும் 11-ந் தேதி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
சென்னை:

ஆயுஷ் மருத்துவ துறைகளை நவீன மருத்துவத்துடன் இணைப்பதை எதிர்த்து நாடு முழுவதும் நேற்று இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் கிளைகள் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் முத்துராஜா தலைமை தாங்கினார். அச்சங்கத்தின் சென்னை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பூபதி ஜான் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் டாக்டர் நிர்மல், இந்திய பல்மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஏ.பி.மகேஸ்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து டாக்டர் முத்துராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ துறைகளையும் ஒரே கலவையாக கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல்கட்டமாக அலோபதி டாக்டர்கள் மட்டுமே செய்துவரும் அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என கடந்த நவம்பர் 19-ந் தேதி அரசிதழில் அறிவிக்கப்பட்டது. இது பொதுமக்களுக்கு பெரிதும் ஆபத்தை விளைவிக்கும் ஒன்றாகும். அறுவை சிகிச்சை செய்வதற்கு என்று ஆங்கில மருத்துவத்துறையில் டாக்டர்கள் தனிபடிப்பு படித்து, தேவையான செய்முறைப்பயிற்சியும் பெறுகின்றனர்.

ஆனால் ஆயுர்வேத படிப்புகளில் அவ்வாறு தனிபடிப்பு மற்றும் செய்முறைப்பயிற்சி இல்லை. இந்த அறிவிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவ துறைகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும். இத்திட்டத்தை ரத்துசெய்யவில்லை என்றால், தமிழகம் முழுவதும் வரும் 11-ந் தேதி அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் ஒருநாள், அவசர மற்றும் கொரோனா சிகிச்சைகளை தவிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு டாக்டர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. பெரும்பாலான மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் அரசு டாக்டர்கள், மருத்துவதுறைகளை ஒருங்கிணைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் இந்திய மருத்துவ சங்கத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அலோபதி டாக்டர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
Tags:    

Similar News