செய்திகள்
மத்திய குழு

வேலூர், ராணிப்பேட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட வெள்ள சேத பகுதிகளில் மத்திய குழு ஆய்வு

Published On 2020-12-07 09:56 GMT   |   Update On 2020-12-07 09:56 GMT
தமிழகத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் நேற்று முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை:

வேலூர் மாவட்டத்தில் நிவர் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட மத்திய குழுவினர் நேற்று மாலை வந்தனர்.

தமிழக அரசின் பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர் குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் க.மணிவாசன் தலைமையில் மத்தியக் குழுவின் தலைவர் மத்திய நீர்வள ஆணைய இயக்குனர் ஹர்ஷா, மத்திய மின் சக்தி துறை துணை இயக்குனர் ஓ.பி. சுமன், மத்திய அரசின் செலவினங்கள் துறை துணை இயக்குனர் அமித் குமார், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் தரம்வீர்ஜா ஆகியோர் கொண்ட குழுவினர் காட்பாடியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு நேற்று மாலை வந்தனர். அங்கு அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்குள்ள கூட்ட அரங்கில் வேலூர் மாவட்டத்தில் சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் குறும்படம் மூலம் விளக்கினார்.

மத்திய குழுவினர் இன்று காலை பொன்னை அருகே உள்ள கண்டிப்பேடு கிராமத்தில் சேதாரம் ஏற்பட்டுள்ள பப்பாளி தோட்டத்தை பார்வையிட்டனர்.

அங்கிருந்த பொதுமக்களிடம் எத்தனை ஏக்கர் பப்பாளி பயிரிடப்பட்டு இருந்தது. எப்போது சேதம் அடைந்தது என்பது குறித்த விவரங்களை அவர்கள் கேட்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து இளைய நல்லூர் கிராமத்தில் பாதிப்படைந்துள்ள நெல் வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து பொன்னை அணைக்கட்டில் பழுதடைந்த மதகுகளையும், மாதாண்ட குப்பம் கிராமத்தில் மின்சார கம்பங்கள் மற்றும் சாலைகள் பழுதடைந்து உள்ளதையும் மத்தியக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் கண்ணன், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அங்கிருந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சென்றனர். அவர்களை கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் வரவேற்றார்.

வாலாஜா ஏகாம்பர நல்லூர், நந்தியாலம் கிராமத்தில் வாழை மரங்கள் சேதம் அடைந்து உள்ளதை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

மேலகுப்பம் கிராமத்தில் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளதையும், ஆற்காடு சாத்தூர் கிராமத்தில் குடிசை வீடு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கே.வேளூர் மற்றும் சக்கரமல்லூர் கிராமத்தில் பாதிப்படைந்துள்ள நெல் வயல்களை மத்தியக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முழுமையாக பார்வையிட்ட பின்னர் சேத மதிப்புகள் குறித்து இந்த குழுவினர் தெரிவிப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News