செய்திகள்
ரமேஷ்

பட்டதாரி பெண்ணிடம் 20 பவுன் நகை, ரூ.19 லட்சம் பறிப்பு

Published On 2020-12-05 23:12 GMT   |   Update On 2020-12-05 23:12 GMT
குளியல் அறை காட்சி வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி, பட்டதாரி பெண்ணிடம் 20 பவுன் நகை, ரூ.19 லட்சம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 30 வயதான எம்.பி.ஏ. பட்டதாரி பெண், 2012-ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்தார். அதே நிறுவனத்தில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த திருவெங்கடபுரம் சாய் நகர் சத்திரபதி சிவாஜி தெருவைச் சேர்ந்த ரமேஷ் (வயது 46) என்பவரும் பணியாற்றி வந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

2013-ம் ஆண்டு பட்டதாரி பெண், மயிலாப்பூரில் உள்ள மற்றொரு கம்பெனிக்கு மாறிவிட்டார். அங்கு வேலை செய்யும் முருகேசன் என்பவருக்கும், அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனை ரமேஷ் தலையிட்டு தீர்த்து வைத்தார்.

அதன்பிறகு ரமேசுக்கும், அந்த பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. ரமேஷ், அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனால் இருவரும் நெருங்கி பழகினர்.

இதற்கிடையில் ரமேஷ், அந்த பெண்ணிடம், “எனது செல்போனில் இருந்த உனது குளியல் அறை காட்சி வீடியோ, தவறுதலாக முருகேசனின் செல்போனுக்கு அனுப்பி விட்டேன். அதை பார்த்த அவர், வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டுகிறார்” என்று கூறி சிறுக சிறுக பட்டதாரி பெண்ணிடம் இருந்து ரூ.19 லட்சம் மற்றும் 20 பவுன் நகையை பெற்றார்.

அதன்பிறகு அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். ஆனால் அதற்கு மறுத்த ரமேஷ், அந்த பெண்ணை சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அத்துடன் முருகேசனுக்கு அந்த வீடியோவை அனுப்பாமலேயே, அவர் பணம் கேட்டு மிரட்டுவதாக பொய் சொல்லி அந்த பெண்ணிடம் நகை, பணம் பறித்ததும் தெரிந்தது.

மேலும் பணம், நகையை திருப்பிக்கேட்டால் உனது குளியலறை வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பட்டதாரி பெண், இதுபற்றி புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவிடம் புகார் செய்தார். இதுபற்றி விசாரிக்கும்படி எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் ஹரிகுமாருக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் உதவி கமிஷனர் ஹரிகுமார், ரமேசை பிடித்து விசாரித்தபோது பட்டதாரி பெண்ணிடம் பொய் சொல்லி நகை, பணம் பறித்ததும், ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியடுவதாக மிரட்டியதும் உண்மை என தெரிந்தது. இதையடுத்து ரமேஷ் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த எம்.கே.பி. நகர் போலீசார், அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News