செய்திகள்
கூடலூரில் விவசாயிகள், வக்கீல்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

கூடலூரில் விவசாயிகள், வக்கீல்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

Published On 2020-12-05 14:03 GMT   |   Update On 2020-12-05 14:03 GMT
கூடலூரில் விவசாயிகள், வக்கீல்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்:

முல்லைப்பெரியாற்றின் தலை மதகு பகுதியான லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேல்பகுதியில் புதிதாக தடுப்பணை கட்டப்பட்டு, பின்னர் அங்கிருந்து குழாய் மூலம் மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என்றும், கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது என்றும் கூறி அந்த திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மதுரையில் நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று காலை கூடலூர் பழைய பஸ் நிலையம் முன்பு விவசாயிகள் மற்றும் வக்கீல்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வக்கீல் முத்துராமலிங்கம் தலைமையில் ஏராளமான விவசாயிகள், வக்கீல்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது, தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இல்லையென்றால் உண்ணாவிரதம், மறியல் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News