செய்திகள்
உயர் நீதிமன்ற மதுரை கிளை

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்குங்கள் -ஐகோர்ட் மதுரை கிளை

Published On 2020-12-05 12:04 GMT   |   Update On 2020-12-05 12:04 GMT
தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை:

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக, திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். டிஎன்பிஎஸ்சி பணி நியமனத்தில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகையை தொலை நிலைக்கல்வியில் படித்தவர்களுக்கு வழங்காமல் நேரடியாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் கூறியிருந்தார். 

இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகையை முறைப்படுத்துவது தொடர்பான சட்டத்திருத்த மசோதா, ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமல் 8 மாதங்களாக இருப்பில் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பதிலைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தனர். ஆங்கிலம் படிப்பவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறினர்.

2016-19 வரை குரூப்-1 தேர்வில் 20 சதவீதம் தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வானவர்களின் விவரம் என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 20 சதவீத தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வான 85 பேரின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கில் ஆளுநரின் செயலர், உள்துறை செயலர் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்து, அவர்கள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News