செய்திகள்
மோசடி

ஆன்லைன் மூலம் பண மோசடி- சென்னை வாலிபர் புகார்

Published On 2020-12-05 02:26 GMT   |   Update On 2020-12-05 02:26 GMT
ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கி தருவதாக சென்னை வாலிபரிடம் ஆன்லைன் மூலம் நடந்த பண மோசடி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை:

ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு உள்ளது என்றும், படித்த இளைஞர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தால், முன்னுரிமை அடிப்படையில் வேலை வாங்கி தரப்படும் என்றும் இணையதளம் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டது. அதை உண்மை என்று நம்பி சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் வசிக்கும் வாலிபர் ஒருவர், ஆன்லைன் மூலம் பதிவு செய்து, ரூ.55 ஆயிரம் பணம் கட்டி ஏமாந்துவிட்டார்.

அவரது பெயர் அபின் (வயது 35). ஒரு குறிப்பிட்ட நிறுவனம்தான் இந்த மோசடி விளம்பரத்தை கொடுத்து, இதுபோல பலரிடம் பணத்தைச் சுருட்டி உள்ளது. தற்போது அந்த நிறுவனத்தை மூடிவிட்டனர். கையில் அகப்பட்டது வரை அப்பாவி இளைஞர்களிடம் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தற்போது நிறுவனத்தையே மூடிவிட்டதாக தெரிகிறது. அந்த நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய நாட்டின் முகவரி மற்றும் தொடர்பு தொலைபேசி எண்கள் அனைத்தும் போலி என்று தெரியவந்துள்ளது.

பணத்தை இழந்த வாலிபர் அபின், இதுதொடர்பாக கோடம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுபோல ஆன்லைன் விளம்பரத்தை நம்பி வேலைக்கு ஆசைப்பட்டு யாரும் பணத்தை இழக்க வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News