பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
வடமதுரை போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
பதிவு: டிசம்பர் 05, 2020 07:32
காதல் ஜோடி
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள கொம்பேறிபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 21). இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் போதும்பொண்ணு (19). இவர் வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் செல்வராஜ், போதும்பொண்ணை திருமணம் செய்வதற்கு, அவரது பெற்றோரிடம் பெண் கேட்டார். அதற்கு அவருடைய பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் செல்வராஜின் பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் அவர்களுடன் காதல்ஜோடியை போலீசார் அனுப்பி வைத்தனர்.