செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த காதல் ஜோடி சரவணகுமார்-மாலதி.

தென்காசியில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

Published On 2020-12-05 00:59 GMT   |   Update On 2020-12-05 00:59 GMT
தென்காசியில் காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
தென்காசி:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சென்னிகுளத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் சரவணகுமார் (வயது 21). என்ஜினீயர். சங்கரன்கோவில்-திருவேங்கடம் ரோடு பகுதியைச் சேர்ந்த குமார் மகள் மாலதி (20). பி.எஸ்சி. பட்டதாரி. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் 2 பேரும் பள்ளிக்கூடத்தில் இருந்தே ஒன்றாக படித்தனர். நாளடைவில் இவர்கள் 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாலதியின் குடும்பத்தினர், அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மாலதி தனது வீட்டில் இருந்து வெளியேறினார்.

தொடர்ந்து மேலநீலிதநல்லூர் வெளியப்ப சுவாமி கோவிலில் சரவணகுமாரும், மாலதியும் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சரவணகுமாரின் உறவினர் வீட்டில் தங்கினர்.

இந்த நிலையில் சரவணகுமார், மாலதி ஆகிய 2 பேரும் நேற்று பாதுகாப்பு கேட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள், போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங்கிடம் மனு வழங்கினர். அந்த மனுவில், தாங்கள் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது சிலர் அந்த வீட்டை சூறையாடி, கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் கூறி உள்ளனர்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், இதுகுறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அங்கு இருதரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பிறகு காதல் ஜோடி, கேரளாவில் தங்கி வேலை செய்து வரும் சரவணகுமாரின் தந்தையிடம் செல்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
Tags:    

Similar News