செய்திகள்
மு.க.ஸ்டாலின்

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று திமுக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

Published On 2020-12-04 23:01 GMT   |   Update On 2020-12-04 23:01 GMT
விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. இன்று (சனிக்கிழமை) கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ள நிலையில், டெல்லி போல தமிழகம் குலுங்கட்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கடிதம் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, தி.மு.க. தொடர்ந்து போராடி வருகிறது. நீதியையும் ஜனநாயகத்தையும் அவமதிக்கும் போக்கினைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் மோடி அரசு, விவசாயிகள் நலன் குறித்துக் கவலைப்படாமல் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி, தங்கள் ஆட்சியை வழிநடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விளைநிலங்களைத் தாரை வார்க்கும் நடவடிக்கையை மேற்கொள்வதிலேயே குறியாக இருக்கிறது.

மத்திய அரசின் போக்கினை உணர்ந்த பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் இந்திய ஒன்றியத்தின் தலைநகரை முற்றுகையிடும் வகையில், ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை நடத்தி, லட்சக்கணக்கான வாகனங்களில் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் திரண்டு, இந்திய தலைநகரில் தொடர் முற்றுகை போராட்டதை கடுங்குளிரிலும் மேற்கொண்டு வருகிறார்கள். தங்கள் கோரிக்கை நிறைவேறி வாழ்வுரிமையை மீட்கும்வரை டெல்லியை விட்டுச்செல்ல மாட்டோம் என முகாமிட்டு அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு ஆண்களும், பெண்களுமாகக் குழந்தைகளுடன் சேர்ந்து போராட்டத்தை நடத்துவதை நாடே வியப்புடனும், வேதனையுடனும் கவனித்துக் கொண்டிருக்கிறது.

கோரிக்கைகளை புறக்கணித்து, பேச்சுவார்த்தை என்ற பெயரிலான மத்திய அரசின் திசை திருப்பல்களையும் போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் ஏற்கவில்லை. நாளுக்கு நாள் வலிமை பெற்றுவரும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் ஆதரவு பெருகுகிறது.

தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போராட்டக் களத்தில் இறங்கிவிட்டனர். அத்தகைய விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் மத்திய அரசின் திருத்தச் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் தி.மு.க.வின் பங்களிப்பு என்பது முக்கியமானது. வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து ஏற்கனவே தி.மு.க.வும், கூட்டணி கட்சியினரும் கொரோனா பேரிடர் கால நெறிமுறைகளுக்குட்பட்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தற்போது இந்திய ஒன்றியத் தலைநகர் டெல்லியில் இரவு-பகல் பாராது, குளிர்-வெயில்-மழை பாராது போராடும் விவசாயிகளுக்கு உணர்வுபூர்வமான ஆதரவு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. களம் காண்பது குறித்து, டிசம்பர் 3-ந்தேதி மாவட்ட செயலாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, டிசம்பர் 5-ந்தேதி (இன்று) காலை 10 மணியளவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் கொரோனா கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கடைப்பிடித்து அறவழியில், ஜனநாயக முறையில் மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கும் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நலன்களுக்கும் தார்மீக ஆதரவு தரும் வகையில் தி.மு.க. நடத்தும் கருப்புக் கொடி அறப்போராட்டத்தில் சேலத்தில் நான் பங்கேற்கிறேன்.

வேலூரில் பொதுச்செயலாளர் துரைமுருகன், மயிலாடுதுறையில் பொருளாளர் டி.ஆர்.பாலு, திருச்சியில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திண்டுக்கல்லில் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, திருவண்ணாமலையில் துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, ஈரோட்டில் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், நீலகிரியில் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, நாமக்கல்லில் துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட செயலாளர்கள் முன்னெடுப்பில், ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள் பங்கேற்புடன் விவசாயிகளின் உரிமை காக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெற்றிகாணட்டும். விவசாயி வேடம் போட்டு பசுமை தழைக்கத் தடைபோடும் ஆட்சியாளர்களின் வேடத்தைக் கலைத்திட கருப்புக் கொடிகள் உயரட்டும். தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும். டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News