செய்திகள்
பொள்ளாச்சியில் கொட்டும் மழையில் பொதுமக்கள் குடைப்பிடித்தப்படி செல்வதை படத்தில் காணலாம்.

பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பரவலாக மழை

Published On 2020-12-04 14:51 GMT   |   Update On 2020-12-04 14:51 GMT
பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
பொள்ளாச்சி:

கடந்த ஜூன் மாதம் பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள அணைகள் முழுகொள்ளளவை எட்டின. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போதிய அளவு மழை பெய்யவில்லை. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதற்கிடையில் கடந்த மாதம் அவ்வப்போது வடகிழக்கு மழை பெய்தது. இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்டு உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி உள்ளது.

இதன் காரணமாக பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்ப சலனம் இல்லாமல் பொள்ளாச்சி பகுதி குளிர்ச்சியாக காணப்பட்டது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்தது. கொட்டும் மழையில் பெண்கள், குழந்தைகளுடன் குடைகளை பிடித்தப்படி சென்றதை காணமுடிந்தது.

மழையின் காரணமாக பல்லடம் ரோடு, காந்தி சிலை பகுதிகளில் மழைநீர் ரோட்டில் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதன் காரணமாக பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோன்று ஆனைமலை, கோட்டூர், கிணத்துக்கடவு பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றன.

நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்மழையின் காரணமாக வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகிறது. தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

வனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகள் மற்றும் தொகுப்பு அணைகள் முழுகொள்ளளவை எட்டி உள்ளன. இதன் காரணமாக அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென்று மழை பெய்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தால் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட கூடும் என்பதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வால்பாறை வட்டார பகுதி முழுவதும் நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர்ந்து லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. பரவலான மழையின் காரணமாக சோலையார் அணையில் 2 மின் உற்பத்தி நிலையங்கள் இயக்கப்பட்டு, அங்கு வெளியேறும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து 131 அடியாக உள்ளது. தொடர் மழையின் காரணமாக சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News