செய்திகள்
மரணம்

கும்பகோணத்தில் வீடு இடிந்து விழுந்து தம்பதி பலி

Published On 2020-12-04 07:47 GMT   |   Update On 2020-12-04 07:47 GMT
டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வீடு இடிந்து விழுந்ததில் வயதான தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள எலுமிச்சம்காய் பாளையம் சிவஜோதி நகரை சேர்ந்த குப்புசாமி (வயது 70) தனது மனைவி யசோதாவுடன் (65) ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். தொடர் மழையால் வீட்டின் சுவர் நனைந்து ஊர்ந்து போனது. திடீரென சுவர் மளமளவென இடிந்து ஓடுகள் விழ தொடங்கியது. அதிர்ச்சியடைந்த அவர்கள் வெளியே வர முயன்றனர். ஆனால் இடிபாடுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே குப்புசாமி, யசோதா பரிதாபமாக இறந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சாலையில் நடந்து சென்ற சரத்(35) என்ற வாலிபர் பலத்த காற்றால் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினார்.

இதேப்போல் டெல்டா மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

கனமழையால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்துள்ளனர். குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளதால் தஞ்சை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 400 ஏக்கர் சம்பா பயிர்கள், திருவாரூர் மாவட்டத்தில் 700 ஏக்கர் நாகை மாவட்டத்தில் 300, மயிலாடுதுறை மாவட்டத்தில் 200 ஏக்கர் என இதுவரை 1600 ஏக்கர் பயிர்கள் மூழ்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம், ஆறுகாட்டுதுறை, நாகை உள்ளிட்ட பகுதிகளில் கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்படுவதால் 11-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

புரெவி புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகள் நிரம்பி உள்ளன.
Tags:    

Similar News