செய்திகள்
மீட்பு

கயத்தாறு அருகே கடத்தப்பட்ட சிறுமி சென்னையில் மீட்பு

Published On 2020-12-04 02:47 GMT   |   Update On 2020-12-04 02:47 GMT
கயத்தாறு அருகே கடத்தப்பட்ட சிறுமி சென்னையில் மீட்கப்பட்டார். இன்று சிறுமியை ஐகோர்ட்டு கிளையில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும், 19 வயதுடைய வாலிபர் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிறுமியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், சிறுமியை பாட்டியின் வீட்டில் தங்க வைத்திருந்தனராம். இந்த நிலையில், அந்த சிறுமி கடந்த அக்டோபர் 26-ந் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தந்தை கயத்தாறு போலீசாரிடம் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

இதற்கிடையில், சிறுமியின் தந்தை மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் கோவில்பட்டி தனிப்படை போலீசார் சிறுமியை தேடி வந்தனர். தனிப்படையினரின் தீவிர விசாரணையில், அந்த சிறுமியை காதலித்த வாலிபர் சென்னைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. சென்னை பல்லாவரம் பகுதியிலுள்ள ஈடன் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் இருந்த சிறுமியையும், அந்த வாலிபரையும் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

தொடர் விசாரணையில், அந்த சிறுமியை வாலிபர் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் அந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, அந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த 2 பேரையும் இன்று(வெள்ளிக்கிழமை) மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜர்படுத்த கயத்தாறு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோர்ட்டு உத்தரவின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கயத்தாறு போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News