செய்திகள்
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

திருச்சியில் கொட்டும் மழையில் மாற்றுத்திறனாளிகள் மறியல் - பெண்கள் உள்பட 200 பேர் கைது

Published On 2020-12-03 15:05 GMT   |   Update On 2020-12-03 15:05 GMT
மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை கேட்டு திருச்சியில் கொட்டும் மழையில் மறியல் செய்த மாற்றுத்திறனாளிகள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்குவது போல தமிழகத்திலும் வழங்க வேண்டும். தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால், மாநில துணை செயலாளர் புஷ்பநாதன், செயலாளர்கள் கோபிநாத், ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மறியல் போராட்டத்தில் உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் காது கேளாதவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர். போராட்டம் நடந்து கொண்டிருந்த போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கண்டோன்மெண்ட் போலீசார் அவர்களை கைது செய்தனர். 125 பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News