செய்திகள்
மழை

கோவை-திருப்பூரில் பரவலாக மழை: நீலகிரியில் கடுங்குளிர்

Published On 2020-12-03 08:31 GMT   |   Update On 2020-12-03 08:31 GMT
கோவையில் இன்று அதிகாலை லேசான சாரல் மழை பெய்தது. இதனால் வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை:

நீலகிரியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவான புரெவி புயலால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசான சாரல் மழை முதல் மிதமான கனமழையும் பெய்து வருகிறது.

கடுமையான பனி மூட்டத்துடன் கால நிலை நிலவுவதால் செடிகளில் நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்குதலை சமாளிக்க விவசாயிகள் தேயிலை மற்றும் காய்கறி பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஊட்டி, கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் அடர்ந்த மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர். பெரும்பாலான தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.

மாறுபட்ட காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் சளி, தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற தொல்லைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதேபோன்று கோவையில் இன்று அதிகாலை லேசான சாரல் மழை பெய்தது. இதனால் வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோன்று வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, மருதமலை, உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

திருப்பூரிலும் இன்று அதிகாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

காங்கயம், வெள்ளகோவில், உடுமலை, தாராபுரம் ஆகிய பகுதிகளிலும் சாரல் மழை முதல் லேசான கனமழை பெய்தது. நீலகிரி, கோவை, திருப்பூரில் தொடர்ந்து மேகமூட்டத்துடன் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
Tags:    

Similar News