செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

முல்லை பெரியாறு திட்டத்தால் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம்- அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2020-12-03 04:11 GMT   |   Update On 2020-12-03 04:11 GMT
முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தால் மதுரையில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும், 50 ஆண்டு காலம் மதுரைக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை:

மதுரை நகருக்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் கலெக்டர் அலுவலக புதிய கட்டிட திறப்பு விழா உள்பட பல்வேறு நலத்திட்டப்பணிகள் தொடங்க விழா மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலெக்டர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை நகரின் குடிநீர் பற்றாக்குறையினை தீர்க்கும் வகையில் முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார். மதுரை மக்களுக்கு முதன்முதலாக கடந்த 1804-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதற்காக வைகை ஆற்றில் ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் பெறப்பட்டன. அப்போது மதுரை மாநகரின் தென்பகுதி மக்களுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டன.

அதன்பின் 1904-ம் ஆண்டு ஆரப்பாளையம் பகுதியில் குடிநீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு சுற்றுப்புற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அடுத்தபடியாக 1970-ம் ஆண்டு நகரின் வடக்கு பகுதி முழுவதும் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் குறைந்தது 15 முதல் 20 வார்டு வரை தான் குடிநீர் வினியோகம் லாரிகள் மூலம் நடந்தது. கடந்த 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மதுரை சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட பின் நகரின் தென் மற்றும் வடபகுதி முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டன. அதன்பின் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் உயர்மட்ட தொட்டிகள் கட்டப்பட்டு, நகர் முழுவதும் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டன.

மதுரை மாநகரில் சுமார் 17 லட்சம் மக்கள் உள்ளனர். எனவே தடையின்றி தண்ணீர் வழங்குவதற்காக முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த அறிவிப்பு இப்போது நனவாகி உள்ளது.

ரூ.1,295 கோடியே 76 லட்சம் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக முல்லை பெரியாறு லோயர் கேம்பிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வைகை அணை அருகே உள்ள பண்ணப்பட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு ஏற்கனவே உள்ள மாநகராட்சி சுத்திகரிப்பு மையத்தில் தற்போது கூடுதல் எந்திரங்கள் அமைக்கப்பட்டு அந்த தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. அதன்பின் குழாய் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு புதிதாக கட்டப்படும் மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தால் மாநகர மக்களுக்கு 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்படும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தால் வரும் 50 ஆண்டுகளுக்கு மதுரையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது.

இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் முதல்-அமைச்சருக்கு மாநகர், மாவட்ட அ.தி.மு.க. மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News